தமிழகம் தலை நிமிர நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேச்சு

தமிழகம் தலை நிமிர நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என அந்த கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார்.;

Update: 2019-02-15 23:15 GMT

புஞ்சைபுளியம்பட்டி,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. ஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் நடத்தி வருகிறார். அதன்படி மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு புஞ்சைபுளியம்பட்டிக்கு சென்றார். அவருக்கு கட்சியின் புறநகர் மாவட்டம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திறந்த வேனில் நின்றபடி அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்வு செய்யும் மாநிலமாக தமிழகம் திகழும். ஆர்.கே.நகர் தேர்தலில் துரோகத்தின் பக்கம் மக்கள் நிற்காமல் நியாயத்தின் பக்கம் நின்றதால் அ.ம.மு.க. வெற்றி பெற்றது. இதேபோல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அ.ம.மு.க. பக்கம் நிற்க வேண்டும். அரசு ஊழியர்கள், நெசவாளர்கள், விவசாயிகள் வாழ்வு செழிக்கவும், தமிழகம் தலை நிமிரவும் அ.ம.மு.க.வுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதுபோல் கோபி, நம்பியூர் பகுதியிலும் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார்.

இந்த நிகழ்ச்சிகளில் ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.செல்வம், பவானிசாகர் ஒன்றிய அமரன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் டி.எஸ்.பொன்னுசாமி, நகர செயலாளர் முருகேசன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்