துணை ராணுவப்படையினர் மீது பயங்கரவாத தாக்குதல் தேவேகவுடா, எடியூரப்பா கண்டனம்

துணை ராணுவப்படையினர் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு தேவேகவுடா, எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Update: 2019-02-15 22:30 GMT
பெங்களூரு, 

துணை ராணுவப்படையினர் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு தேவேகவுடா, எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத தாக்குதல்

காஷ்மீரில், துணை ராணுவப் படையினர் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 44 வீரர்கள் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அனைத்து தரப்பு மக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இதுகுறித்து முன்னாள் பிரதமர் தேவே கவுடா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

ஒற்றுமையாக நின்று...

காஷ்மீரில் துணை ராணுவப்படையினர் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இதை கண்டிக்கிறேன். உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்காக நான் பிரார்த்திக்கிறேன்.

காயம் அடைந்த வீரர்கள் வேகமாக குணம் அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இதுபோன்ற கோழைத்தனமான தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த துக்கமான நேரத்தில், நாம் ஒற்றுமையாக நின்று பலத்தை காட்ட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறினார்.

எடியூரப்பா

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பயங்கரவாதிகளின் தாக்குதலில் நமது ராணுவ வீரர்கள் மரணம் அடைந்துள்ளது வேதனை அளிப்பதாக உள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டிக்கிறேன். இதில் மண்டியா மாவட்டத்தை சேர்ந்த வீரர் குருவும் வீரமரணம் அடைந்துள்ளார். அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறிய வயதிலேயே தனது உயிரை நாட்டிற்காக அர்ப்பணித்த குரு, இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்துவிட்டு சென்றுள்ளார். நாட்டுக்கு அவர் ஆற்றிய சேவையை நாடு என்றும் மறக்காது. குருவின் குடும்பத்திற்கு இந்த துயரத்தை தாங்கும் சக்தியை வழங்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். மாநில அரசு, அந்த குடும்பத்திற்கு உரிய நிவாரண உதவியை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினேஷ் குண்டுராவ்

இதுகுறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் வெளியிட்டுள்ள பதிவில், “துணை ராணுவப்படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது. இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். எனது இதயம்கனிந்த இரங்கலை உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள் கிறேன்” என்றார்.

மேலும் செய்திகள்