பெங்களூருவில் கர்நாடகம்-தமிழக போக்குவரத்து அதிகாரிகள் ஆலோசனை இரு மாநிலங்களுக்கு இடையே கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை
பெங்களூருவில் கர்நாடகம்-தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.;
பெங்களூரு,
பெங்களூருவில் கர்நாடகம்-தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனையின்போது இரு மாநிலங்களுக்கு இடையே கூடுதல் பஸ்களை இயக்குவது குறித்து விவாதித்தனர்.
தமிழக போக்குவரத்து அதிகாரிகள்
கர்நாடக அரசு போக்கு வரத்து கழக (கே.எஸ்.ஆர்.டி.சி.) நிர்வாக இயக்குனர் சிவயோகி கலசத்தை பெங்களூருவில் உள்ள அவரது அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பாஸ்கரன் நேற்று நேரில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது, சேலம் மண்டல அதிகாரி அரவிந்த், விழுப்புரம் மண்டல அதிகாரி கணேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இருமாநில அதிகாரிகள், போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பில் கடந்த 2007-08-ம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையே ஓடும் அரசு பஸ்கள் குறித்தும், கர்நாடகம் மற்றும் தமிழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது குறித்தும், அதை மாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இருதரப்பு பேச்சுவார்த்தை
அந்த ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு தற்போது இரு மாநிலங்களுக்கு இடையே பஸ்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே ஓடும் மார்க்கத்தில் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், புதிய பகுதிகளுக்கு பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாக கர்நாடக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கர்நாடகம்-தமிழகம் இடையே கூடுதல் பஸ்களை இயக்குவது தொடர்பான ஒப்பந்தம் குறித்த கடிதத்தை தமிழக அதிகாரிகள், கர்நாடக அதிகாரிகளிடம் வழங்கினர்.
இதுகுறித்து இருமாநில அதிகாரிகளும் விவாதித்தனர். ஒப்பந்தம் போடுவதற்கு முன்பு நடந்த இந்த இருதரப்பு பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்ததாக கர்நாடக அதிகாரிகள் தெரிவித்தனர்.