பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு காங்கிரஸ் சார்பில் அஞ்சலி கூட்டம் பெங்களூருவில் நடந்தது
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு காங்கிரஸ் சார்பில் அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற்றது.
பெங்களூரு,
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு காங்கிரஸ் சார்பில் அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற்றது.
மிக கொடூரமானது
கர்நாடக காங்கிரஸ் சார்பில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் பெங்களூருவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் கலந்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
அதே போல் இதில் பங்கேற்ற கட்சி நிர்வாகி களும் அஞ்சலி செலுத்தினர். இதில் தினேஷ் குண்டுராவ் பேசியதாவது:-
துணை ராணுவப்படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், மிக கொடூரமானது. இத்தகைய மோசமான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். போர்க்களத்தில் நடப்பது போல் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
பயங்கரவாதிகளை ஒழிக்க...
இந்த நேரத்தில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆட்சியை யார் நடத்தினாலும், நாங்கள் மத்திய அரசுடன் இருக்கிறோம். பயங்கரவாதிகளை ஒழிக்க மத்திய அரசு கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 4 ஆண்டுகளில் ராணுவ வீரர்கள் அதிக எண்ணிக்கையில் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். பயங்கரவாதிகள் திட்டமிட்டு இத்தகைய சம்பவத்தை நடத்துகிறார்கள். வீரர் களுக்கு தைரியம் கூறுவதுடன் பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும். இந்த சம்பவத்தில் உள்ளூரை சேர்ந்தவரின் பங்கும் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதையும் கண்டறிய வேண்டும்.
இவ்வாறு தினேஷ் குண்டுராவ் பேசினார்.
பாடம் புகட்ட வேண்டும்
அக்கட்சியின் மூத்த தலைவர் பி.எல்.சங்கர் பேசுகையில், “இளம் வயது பயங்கரவாதி ஒருவன் நடத்திய தாக்குதலில் நமது துணை ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். ராணுவத்தில் இருப்பவர்கள் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் வலியை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். மண்டியாவை சேர்ந்த வீரர் குருவின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” என்றார்.