தலையூத்து அருவியில் மெக்கானிக் உடல் மீட்பு, கொலை செய்யப்பட்டதாக தந்தை புகார்

தலையூத்து அருவியில் பிணமாக மீட்கப்பட்ட மெக்கானிக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அவருடைய தந்தை புகார் அளித்தார்.

Update: 2019-02-15 22:30 GMT
திண்டுக்கல், 

வேடசந்தூர் தாலுகா நல்லமனார்கோட்டை அருகேயுள்ள தொட்டணம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவர், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், நான் கூலி வேலை செய்து வருகிறேன். எனது மகன் சிலம்பரசன் (வயது 22), வடமதுரை சாலையில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை செய்தார்.

இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி வழக்கம் போல் சிலம்பரசன் வேலைக்கு சென்றார். அதன்பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அதுபற்றி கம்பெனி அதிகாரியிடம் கேட்டபோது சிலம்பரசன் ரூ.500 வாங்கி கொண்டு, மோட்டார் சைக்கிளில் பழனிக்கு சென்றதாக கூறினார். ஆனால், மறுநாளும் சிலம்பரசன் வீட்டுக்கு வரவில்லை.

இதனால் பழனிக்கு சென்று தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். இதற்கிடையே தலையூத்து அருவி பகுதியில் சிலம்பரசன் சென்ற மோட்டார்சைக்கிள் நிற்பதாக சத்திரப்பட்டி போலீசார் எங்களுக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து போலீசாருடன், அங்கு சென்ற நாங்கள் சிலம்பரசனை தேடினோம்.

அப்போது பாறைக்கு அடியில் சிலம்பரசன் பிணமாக கிடந்தார். எனது மகன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு எந்த காரணமும் இல்லை. அதேநேரம் சிலம்பரசன் 3 பேருடன் தலையூத்து அருவிக்கு சென்றதாக நண்பர்கள் கூறுகின்றனர். எனவே, எனது மகனை கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்