பாவூர்சத்திரம், களக்காடு பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி உள்பட 2 பேர் பலி

பாவூர்சத்திரம், களக்காடு பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி உள்பட 2 பேர் பலியானார்கள்.

Update: 2019-02-15 21:45 GMT
பாவூர்சத்திரம், 

பாவூர்சத்திரம், களக்காடு பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி உள்பட 2 பேர் பலியானார்கள்.

விவசாயி

பாவூர்சத்திரம் அருகே உள்ள சாலைப்புதூரை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 32) விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் அடைக்கலப்பட்டணம்-பட்டமுடையார்புரம் செல்லும் சாலையில் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளைகள் மின்வயரில் பட்டு அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த அவர் நேற்று காலை தோட்டத்திற்கு சென்று, அந்த மரத்தில் ஏறி கிளைகளை வெட்டிக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் மணிவண்ணன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகி மரத்தில் தொங்கிக்கொண்டிருந்தார். இதுகுறித்த தகவலறிந்த ஆலங்குளம் தீயணைப்பு துறையினர் மற்றும் பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மின் இணைப்பை துண்டித்தனர்.

பின்னர் மரத்தில் ஏறி மணிவண்ணனின் உடலை கீழே இறக்கினர். பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மணிவண்ணன் நெல்லை மாவட்ட பயணிகள் நலச்சங்க தலைவராகவும் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் சாவு

களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தை சேர்ந்தவர் மீனாட்சி அம்மாள் (69). இவர் சம்பவத்தன்று வீட்டில் உள்ள கழிப்பறைக்கு சென்று, சுவிட்சை போட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் உடல் கருகி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்