வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் நளினியை சந்திக்க தாயாருக்கு அனுமதி மறுப்பு கவர்னர், முதல்-அமைச்சரை சந்திக்க முடிவு

வேலூர் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள நளினியை சந்திக்க வந்த அவருடைய தாயாருக்கு, சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. இதனால் ஏமாற்றத்துடன் திரும்பிய அவர் கவர்னர் மற்றும் முதல்-அமைச்சரை சந்திக்க இருப்பதாக கூறினார்.;

Update: 2019-02-15 22:45 GMT
வேலூர், 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் தண்டனை அனுபவித்து வருகின்றனர். 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் தங்களை விடுதலை செய்ய கவர்னர் விரைந்து முடிவெடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி வேலூர் மத்திய சிறையில் முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அதேபோன்று பெண்கள் சிறையில் நளினி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

தொடர் உண்ணாவிரதம் காரணமாக முருகன், நளினி இருவரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் குளுகோஸ் ஏற்றப்பட்டது. மேலும் நேற்றுமுன்தினம் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் பெண்கள் சிறைக்கு சென்று நளினியின் உடல்நிலையை பரிசோதனை செய்தனர். மேலும் அவருடைய ரத்தம் மற்றும் சிறுநீரை சேகரித்து பரிசோதனைக்காக கொண்டுசென்றனர்.

சிறை விதிகளை மீறி முருகனும், நளினியும் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதால் அவர்களுக்கு சிறைத்துறை சார்பில் வழங்கப்படும் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவர்களை வருகிற 27-ந் தேதி வரை பார்வையாளர்கள் சந்திக்க முடியாது.

இந்த நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள நளினியை சந்திப்பதற்காக அவருடைய தாய் பத்மா (வயது 80) நேற்று வேலூர் பெண்கள் சிறைக்கு வந்தார். ஆனால் நளினியை சந்திக்க அவருக்கு சிறைநிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. இதனால் அவர் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

பின்னர் பத்மா நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது மகள் உடல்நிலை மோசமாக இருப்பதாக அறிந்தேன். எனவே தாய் என்பதாலும், ரத்தம் கொடுத்தவள் என்பதாலும் பாசத்துடன் அவளை சந்திக்க வேண்டும் என்று வந்தேன். நான் அவளை பார்த்து, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பார்க்க போகிறேன். கவர்னரையும் பார்த்து உனக்காக நான் கெஞ்சி கேட்கிறேன்.

7 பேரையும் விடுதலை செய்ய கேட்கிறேன் எனவே உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு போக வந்தேன். ஆனால் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் வருத்தத்துடன் போகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் நளினியின் தாய் பத்மா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், நளினி உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கவர்னருக்கு பரிந்துரை செய்தது. ஆனால் அந்த பரிந்துரை மீது கவர்னர் எந்தவித முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் தங்களை விடுதலை செய்யக்கோரி முருகனும், நளினியும் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களுடைய உடல்நிலை ஒவ்வொரு நாளும் மோசமடைந்து வருகிறது. அவர்கள் 2 பேரையும் காப்பாற்றவேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது. எனவே அவர்களை காப்பாற்ற தமிழக அரசு உத்தரவிடவேண்டும் என்று கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்