தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் அதிகாரி தகவல்

தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகேசன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-15 22:45 GMT
கிருஷ்ணகிரி, 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையின் கீழ் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 17 தொழிலாளர் நல வாரியங்கள் அமைத்து, அதில் கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் ஓட்டுநர்கள் உள்பட பல்வேறு அமைப்பு சாரா தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கும், வாரிசுதாரர்களுக்கும் அரசு வழங்கும் நலத்திட்டங்களான கல்வி, கண்கண்ணாடி, மகப்பேறு, திருமணம், ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் உதவிகள் தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் பதிவுடன் ஆதார் எண் இணைக்கப்பட உள்ளதால், உறுப்பினர்களின் அசல் அட்டை நகலுடன், ஆதார் அட்டை நகல் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தொழிலாளர் உதவி ஆணையர்(சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம், எல்.ஐ.சி. அலுவலகம் எதில், சேலம் மெயின் ரோடு, கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும், இந்த அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆதார் பெட்டியிலும் போடலாம் என தெரிவிக்கப்படுகிறது. அல்லது இந்த அலுவலக தொலைபேசி எண் 04343-231321 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை தெரிவித்தால், அவர்களின் பதிவு எண்ணுடன் ஆதார் எண் இணைத்துக்கொள்ளப்படும்.

ஆதார் எண்ணை தங்கள் பதிவுடன் இணைத்துகொள்ள வருகிற 20-ந் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்