சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழா கிராமம் முழுவதும் மீன்வாசனை

சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான கிராம மக்கள் வகை வகையான மீன்களை பிடித்து சென்றனர். இதையொட்டி கிராமம் முழுவதும் மீன்வாசனை கமகமவென பரவியது.

Update: 2019-02-14 22:45 GMT
சிங்கம்புணரி, 

கிராமபுறங்களில் உள்ள கண்மாய், குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர் நிரம்பி இருக்கும் காலங்களில் இயற்கையாக மீன்குஞ்சுகள் நன்கு வளர தொடங்கும். மேலும் கண்மாய், குளங்களில் செயற்கையாகவும் மீன்குஞ்சுகளை விட்டு வளர வளர்க்கும் முறையும் உள்ளது. அதில் மீன்கள் நன்கு வளர்ந்தவுடன் கிராமத்தின் சார்பில் ஏலம் விடப்படும்.

சில கிராமங்களில் அதுபோன்று இல்லாமல் கிராம மக்கள் மீன்பிடி திருவிழாவாக கொண்டாடும் வகையில் கண்மாய் மற்றும் குளங்களில் தண்ணீர் வற்றி விடும் போது, கிராம மக்கள் அதில் உள்ள மீன்களை பிடிக்க தேதி குறிக்கப்படும். அதன்பின்பு மீன்பிடி திருவிழா குறித்த தேதி சம்பந்தபட்ட கிராமம் மற்றும் சுற்றுவட்டாரத்த்ை- சேர்ந்த கிராம மக்களுக்கு தெரிவிக்கப்படும்.

இதுபோன்று சிங்கம்புணரி அருகே உள்ள வகுத்தெழுவன்பட்டியில் உள்ளது புதுக் கண்மாய். இந்த கண்மாயில் நீர் வற்றிய நிலையில் ஆண்டுதோறும் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்திற்கான மீன்பிடி திருவிழா நேற்று நடந்தது. அதன்படி காலை 9 மணிக்கு வகுத்தெழுவன்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர். அங்குள்ள கிராம தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்து வணங்கினர்.

அதைத்தொடர்ந்து கிராம மக்கள் ஏராளமானோர் கண்மாய் கரையில் நின்றிருந்தனர். பின்னர் கொடி அசைக்கப்பட்டதும், கரையில் காத்து இருந்த கிராம மக்கள் கண்மாயில் இறங்கி மீன்பிடிக்க தொடங்கினர். அதில் சிலேபி கெண்டை, கெழுத்தி மற்றும் கட்லா உள்ளிட்ட வகை வகையான மீன்கள் பிடிபட்டன. அதை மகிழ்ச்சியுடன் கிராம மக்கள் எடுத்து சென்றனர். அந்த மீன்களை தங்களின் வீடுகளிலும், உறவினர், நண்பர்களின் வீடுகளுக்கும் கொடுத்து உண்டு மகிழ்ந்தனர். மீன்பிடி திருவிழாவையொட்டி வகுத்தெழுவன்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மீன்வாசனை கமகமவென பரவி இருந்தது.

மேலும் செய்திகள்