கவர்னருடன் பா.ஜனதா தலைவர்கள் சந்திப்பு மாநில அரசு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பிரீத்தம்கவுடா எம்.எல்.ஏ. வீடு மீது தாக்குதல் நடந்த சம்பவம் தொடர்பாக கவர்னர் வஜூபாய் வாலாவை பா.ஜனதா தலைவர்கள் நேற்று நேரில் சந்தித்து பேசினர்.
பெங்களூரு,
பிரீத்தம்கவுடா எம்.எல்.ஏ. வீடு மீது தாக்குதல் நடந்த சம்பவம் தொடர்பாக கவர்னர் வஜூபாய் வாலாவை பா.ஜனதா தலைவர்கள் நேற்று நேரில் சந்தித்து பேசினர். மாநில அரசு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
பெங்களூரு திரும்பினர்
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பிரீத்தம்கவுடா. இவர் பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில் பிரீத்தம் கவுடா ஜனதாதளம் (எஸ்) கட்சி தேசிய தலைவர் தேவே கவுடா, முதல்-மந்திரி குமாரசாமி பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் ஹாசனில் உள்ள பிரீத்தம் கவுடா எம்.எல்.ஏ.வின் வீடு மீது நேற்று முன்தினம் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா தலைமையில் ஒரு குழு ஹாசனுக்கு நேரில் சென்று பிரீத்தம்கவுடா குடும்பத்தினரை நேரில் சந்தித்துவிட்டு பெங்களூரு திரும்பினர். இந்த நிலையில் எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா தலைவர்கள் நேற்று பெங்களூரு ராஜ்பவனில் கவர்னர் வஜூபாய் வாலாவை நேரில் சந்தித்து பேசினர்.
பாதுகாப்பு வழங்க...
அப்போது பிரீத்தம்கவுடா எம்.எல்.ஏ. வீடு மீது நடந்த தாக்குதல் தொடர்பாக ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
கடந்த 13-ந் தேதி ஜனதா தளம்(எஸ்) கட்சி தொண்டர்கள் ஹாசனில் பிரீத்தம்கவுடா எம்.எல்.ஏ. வீட்டின் முன்பு சட்டவிரோதமாக கூடினர். இதுபற்றி அந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
கற்களை வீசி தாக்குதல்
ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் அத்துமீறி வீட்டு வளாகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். பா.ஜனதா தொண்டர் ஒருவரை தாக்கியுள்ளனர்.
மேலும் பிரீத்தம்கவுடாவை கொலை செய்வதாக அக்கட்சியின் தொண்டர்கள் பேசிக்கொண்டனர். அத்துடன் எம்.எல்.ஏ.வின் வீடு மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சட்ட ரீதியாக நடவடிக்கை
ஜனதா தளம்(எஸ்) கட்சி நிர்வாகிகள் கொடுத்த பொய் புகாரின் பேரில் பா.ஜனதாவை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சட்டசபையில் பிரச்சினை எழுப்பினோம். ஆனால் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசவிடாமல் இடையூறு செய்தனர்.
போலீஸ் துறையோ அல்லது சட்டசபையோ அந்த எம்.எல்.ஏ.வுக்கு பாதுகாப்பு வழங்க தவறிவிட்டது. இந்த விஷயத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரீத்தம்கவுடா எம்.எல்.ஏ.வுக்கு பாதுகாப்பு வழங்கும்படி மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க உத்தரவிட வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்பட அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.