கோவை தொழில்அதிபரை விதானசவுதாவுக்கு வரவழைத்து மந்திரியாக நடித்து ரூ.1.12 கோடி மோசடி முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன், பேரன் உள்பட 8 பேர் கைது

கோவை தொழில்அதிபரை விதானசவுதாவுக்கு வரவழைத்து மந்திரியாக நடித்து ரூ.1.12 கோடி மோசடி செய்த முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன், பேரன் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2019-02-14 23:00 GMT
பெங்களூரு, 

கோவை தொழில்அதிபரை விதானசவுதாவுக்கு வரவழைத்து மந்திரியாக நடித்து ரூ.1.12 கோடி மோசடி செய்த முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன், பேரன் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை தொழில்அதிபர்

தமிழ்நாடு கோவையை சேர்ந்தவர் ரமேஷ். தொழில்அதிபர். இவர் ரூ.100 கோடி கடன் வாங்க முடிவு செய்து பெங்களூருவில் வசித்து வரும் தோழி இந்திராவிடம் உதவி கேட்டுள்ளார். அவர், இளமதி என்பவரை நாடியுள்ளார். இளமதி கடன் பெற்று கொடுக்க உதவுவதாக கூறினார்.

இளமதி கூறியதை தொடர்ந்து கார்த்தி கேயன் என்பவர் இந்திரா, ரமேசிடம் குறைந்த வட்டிக்கு பணம் கொடுப்பதாக கூறியுள்ளார். மேலும் முத்திரைத்தாள் செலவை ஏற்றுக்கொள்வதுடன், கமிஷனாக தங்களுக்கு 1.12 சதவீதம் கொடுக்க வேண்டும் என்று கார்த்திகேயன் கூறியுள்ளார். இதற்கும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ரூ.1.12 கோடி மோசடி

கடந்த மாதம் (ஜனவரி) 2-ந் தேதி ரமேஷ், கார்த்திகேயனை பெங்களூரு விதானசவுதா (சட்டசபை) முதல் மாடியில் சந்தித்து பேசினார். அப்போது கார்த்திகேயனுடன் மேலும் சிலர் இருந்தனர். இந்த வேளையில் கடன் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கார்த்திகேயன் கூறினார். இதையடுத்து எம்.ஜி.ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் வைத்து ரமேசிடம் இருந்து முத்திரைத்தாள் மற்றும் ஆவணங்களை பெற்றுக்கொண்ட கார்த்திகேயனின் கூட்டாளிகள் அவரிடம் இருந்து கமிஷன் தொகையான ரூ.1.12 கோடி வாங்கிச் சென்றனர்.

சில நாட்கள் ஆனபோதிலும் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அவர்களின் செல்போன்களும் ‘சுவிட்ச்-ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ரமேஷ் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுதொடர்பாக விதானசவுதா போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் பணம் கைமாறியது கப்பன்பார்க் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் அந்த புகார் கப்பன்பார்க் போலீஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன் பேரில் கப்பன்பார்க் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

8 பேர் கைது

இந்த நிலையில், ரூ.1.12 கோடி மோசடி செய்த வழக்கில் 8 பேரை கப்பன்பார்க் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பெங்களூரு சேஷாத்திபுரத்தில் வசித்து வரும் கார்த்திகேயன் (வயது 60), கார்த்திகேயனின் மகன் சொரூப் (24), பனசங்கரி 3-வது ஸ்டேஜில் வசித்து வரும் மணிகண்டா (25), தியாகராஜநகரை சேர்ந்த சுமன் (27), அபிலாஷ் (27), பெங்களூரு மைசூருரோட்டில் வசித்து வரும் ஜான்மூன் (49), தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் (34), திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த பிரபு (30) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான கார்த்திகேயன் சிவாஜிநகர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. பழனியப்பனின் மகன் ஆவார். இவர் தனது பெயரை கே.கே.செட்டி எனக்கூறியும் தான் மந்திரியாக இருப்பதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். அதாவது தனது துறையில் உபரியாக வருவாய் இருப்பதாகவும், அதில் இருந்து கடன் கொடுப்பதாகவும் ரமேசிடம் கூறியுள்ளார்.

ரூ.5 ஆயிரம் கொடுத்தனர்

மேலும் மோசடியை அரங்கேற்ற திட்டமிட்ட கார்த்திகேயன் கர்நாடக அரசுக்கு சொந்தமான கார் டிரைவருக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுத்து அந்த காரை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

இதுதவிர, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் கோட்டா சீனிவாச பூஜாரிக்கான விதானசவுதாவில் உள்ள அறையை நிர்வகிக்கும் ஊழியர் மகாதேவப்பாவுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்து அந்த அறையை சிறிது நேரம் கார்த்திகேயன் பயன்படுத்தி ரமேசிடம் பேசியதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாகவும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்