கருப்புக்கொடி காட்டியதன் மூலம் தமிழகத்துக்கு வரும் நல்ல திட்டங்களை வைகோ எதிர்க்கிறாரா? தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

கருப்புக்கொடி காட்டுவதன் மூலம் தமிழகத்துக்கு வரும் நல்ல திட்டங்களை வைகோ எதிர்க்கிறாரா? என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.;

Update: 2019-02-14 22:30 GMT
ஈரோடு, 

ஈரோடு கங்காபுரம் டெக்ஸ்வேலி வளாகத்தில் பா.ஜனதா கட்சி சார்பில் கைத்தறி, விசைத்தறி, மற்றும் ஜவுளித்துறை பிரதிநிதிகளுடன் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும்போது கருப்புக்கொடி காட்டுவதன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் வைகோ மதிப்பை இழந்து வருகிறார். பிரதமர் மோடி வெறும் அரசியல் காரணங்களுக்காக வரவில்லை. அவர் வரும்போதெல்லாம் தமிழ்நாட்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நல்ல திட்டங்களை வழங்குவதற்காக வருகிறார்.

இப்படி எய்ம்ஸ், மெட்ரோ ரெயில் திட்டம் என்று பல நல்ல திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. கருப்புக்கொடி காட்டுவதன் மூலம் மோடியால் தமிழகத்துக்கு வரும் நல்ல திட்டங்களை எதிர்க்கிறாரா?. வைகோவின் வெற்று போராட்டங்களால் அவரே உதிர்ந்து விடுவார். யானையின் வருகையை சுண்டெலி தடுக்க முடியுமா?. தமிழகத்தின் வளர்ச்சித்திட்டங்களுக்கு எதிராக வைகோ கருப்புக்கொடி காட்டுவதை மக் களே ஏற்றுக்கொள்ளவில்லை.

அவருக்கு எதிராக நாமும் கருப்புக்கொடி காட்டலாமா என்று எங்கள் தொண்டர்கள் கேட்டார்கள். ஆனால் அவரை எல்லாம் கொஞ்சமும் கண்டு கொள்ளவேண்டாம், அவரே மதிப்பு இழந்து விடுவார் என்று கூறி இருக்கிறோம். தமிழக முதல்-அமைச்சர் ஏழை எளியவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதாக அறிவித்து இருப்பதை வரவேற்கிறோம்.

தமிழகத்தில் அரசியல் கட்சியினருடன் நேர்மறையான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எங்கள் நேரடி எதிரிக்கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடக்கிறது. கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்ததும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்று அறிவிக்கப்படும்.

நாடாளுமன்றத்தில் முலாயம்சிங் யாதவ் பிரதமர் மோடியை பாராட்டி இருப்பது, ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளின் பாராட்டாக கருதுகிறோம்.

இவ்வாறு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

மேலும் செய்திகள்