கோவில்பட்டி அருகே காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல் சீராக குடிநீர் வழங்க கோரிக்கை
கோவில்பட்டி அருகே சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சாலைமறியல்
கோவில்பட்டி அருகே வரதன்பட்டி பஞ்சாயத்து காட்டுராமன்பட்டியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், கடந்த ஒரு மாதமாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. எனவே குடிநீர் குழாய் உடைப்பை உடனே சரி செய்து, சீராக குடிநீர் வழங்க வேண்டும். அங்கு தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறைகேடுகளைக் களைந்து, அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அந்த கிராம மக்கள் நேற்று காலையில் காலிக் குடங்களுடன் காட்டுராமன்பட்டி மெயின் ரோட்டில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் கோவில்பட்டி-கடலையூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
உடனே கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி, சப்-இன்ஸ்பெக்டர் திலீப், எட்டயபுரம் தாசில்தார் வதனாள், யூனியன் ஆணையாளர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கிராம மக்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலைமறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.