தாலிகட்ட வற்புறுத்தியதால் ஆழியாறு பூங்காவுக்கு வந்த காதல் ஜோடிகள் ஓட்டம்

தாலிகட்ட வற்புறுத்தியதால் ஆழியாறு பூங்காவுக்கு வந்த காதல் ஜோடிகள் ஓட்டம் பிடித்தனர்.

Update: 2019-02-14 22:15 GMT
பொள்ளாச்சி,

காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை, குரங்கு நீர்வீழ்ச்சி பகுதிகளில் ஏராளமான காதல் ஜோடிகள் காணப்பட்டனர். காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிசு பொருட்கள் மற்றும் ரோஜா பூக்கள் கொடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்தினார்கள். மேலும் கோட்டூர் ரோட்டில் தர்பூசணி கடைகளில் ஆழியாறு பூங்காவிற்கு செல்லும் காதலர்களை வரவேற்கும் விதமாக காதலர் தின வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் பொம்மைகளை கட்டி தொங்கவிட்டு இருந்தனர். இந்த நிலையில் கையில் கொடிகளை ஏந்தியவாறு, ஆழியாறு பூங்காவுக்கு வந்த இந்து முன்னணியினர், அங்கிருந்த காதல் ஜோடிகளை விரட்டினர். சில ஜோடிகளுக்கு தாலி கயிற்றை கொடுத்து தாலி கட்ட சொல்லி வற்புறுத்தினர். இதனால் காதல் ஜோடிகள் விட்டால் போதும் என்று ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த ஆழியாறு போலீசார் விரைந்து வந்து பூங்கா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு அமைப்புகளால் அச்சுறுத்தல் இருந்ததால் பாதுகாப்பு கருதி மதியம் வரைபூங்காவிற்கு காதல் ஜோடிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் கோவை உள்பட வெளியூர்களில் இருந்து வந்த காதல் ஜோடிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதன்பின்னர் மதியத்திற்கு பிறகு காதல் ஜோடிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் பூங்கா முன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குரங்கு நீர்வீழ்ச்சி மற்றும் ஆழியாறு வனப்பகுதியில் அத்துமீறி சென்ற காதல் ஜோடிகளை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

முன்னதாக காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் ஆழியாறு பூங்கா முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கோவை தெற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் கோட்டூர் நகர இந்து முன்னணி பொதுச்செயலாளர் செந்தில் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்