கோவை குண்டுவெடிப்பு தினத்தையொட்டி இந்து அமைப்புகள் தடையை மீறி அஞ்சலி எச்.ராஜா உள்பட 1,200 பேர் கைது

குண்டுவெடிப்பு தினத்தையொட்டி, கோவையில் தடையை மீறி இந்து அமைப்பினர் அஞ்சலி நிகழ்ச்சியை நடத்தினார்கள். இதனால் எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட 1,200 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-02-14 21:30 GMT
கோவை,

கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 60-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். மேலும், 250-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். குண்டுவெடிப்பு தினத்தையொட்டி ஆண்டுதோறும் இந்து அமைப்பினர் ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடத்தி வருகிறார்கள். சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை கவனத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி அளிப்பது இல்லை. இருந்தாலும் தடையை மீறி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று குண்டு வெடிப்பு தினத்தையொட்டி இந்து அமைப்புகள் சார்பில் ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. பாரதீய ஜனதா, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., விசுவஇந்து பரிஷத் அமைப்புகள் சார்பில் நடைபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிக்கு பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமை தாங்கினார்.

மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், எஸ்.ஆர்.சேகர், சி.ஆர்.நந்தகுமார், கருமுத்து தியாகராஜன், சுதாகர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த ராமநாதன், இந்து முன்னணியை சேர்ந்த குணா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக வந்து பாரத மாதா உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். போலீஸ் தடையை மீறி இந்த நிகழ்ச்சி நடந்ததால் அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி ஒரு மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.

இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில், நிர்வாகிகள் அஞ்சலி செலுத்துவதற்காக கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜலகண்டேசுவரர் கோவில் முன் திரண்டனர். பின்னர் அங்கிருந்து ஆர்.எஸ்.புரத்துக்கு ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இதில் கலந்துகொண்ட அர்ஜுன் சம்பத் உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர். அகில பாரத இந்து மகாசபா சார்பில் இளைஞர் அணி மாநில தலைவர் சுபாஷ் தலைமையில் ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி ரோட்டில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு டி.பி. ரோடு பகுதியில் அஞ்சலி செலுத்தினார்கள். தடையை மீறி ஊர்வலமாக வந்ததாக அவர்கள் 110 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் பாரத்சேனா மாநில தலைவர் செந்தில்கண்ணன், மாநில இளைஞர் அணி தலைவர் அயோத்தி ரவி, சரவணன், போத்தனூர் ரவி, அனைத்து இந்து இயக்க கூட்டமைப்பை சேர்ந்த ஜலேந்திரன், இந்து பாரத்சேனா தலைவர் வீரராஜா, பாஸ்கரசுவாமிகள், மாநில மகளிர் அணிதலைவி சரசுவதி, வீரமுத்து, ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்களும் கைது செய்யப்பட்டனர். தடையை மீறி நடத்தப்பட்ட அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்து அமைப்புகளை சேர்ந்த மொத்தம் 1,200 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இரவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்