எமரால்டில் ரூ.18½ கோடியில் அரசு ஆஸ்பத்திரி கட்டுமான பணிகள் தீவிரம்
எமரால்டில் ரூ.18½ கோடியில் அரசு ஆஸ்பத்திரி கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மஞ்சூர்,
மஞ்சூர் அருகே உள்ளது எமரால்டு கிராமம். இந்த கிராமத்தை சுற்றி அட்டுபாயில், அண்ணா நகர், எமரால்டு வேலி, சுரேந்திர நகர், பேலிதளா, கோத்தகண்டிமட்டம், நேரு நகர், நேரு கண்டி, லாரன்ஸ், காந்தி கண்டி, அவலாஞ்சி உள்பட 30-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. மேற்கண்ட கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. இங்குள்ளவர்கள் பெரும்பாலும் கூலி தொழிலாளிகள் ஆவர். மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் நோய்வாய்ப்பட்டால் சிகிச்சைக்காக 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊட்டிக்கு சென்று வருகின்றனர். இதனால் அவர்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. இதனை கருத்தில் கொண்டு எமரால்டு பகுதியில் அரசு ஆஸ்பத்திரி கட்ட வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் நீண்ட காலமாக தமிழக அரசை வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு எமரால்டு பகுதியில் 50 படுக்கை வசதியுடன் கூடிய புதிய ஆஸ்பத்திரி கட்ட ரூ.18 கோடியே 54 லட்சம் நிதியை தமிழக அரசு ஒதுக்கியது. அதன்பின்னர் எமரால்டு போலீஸ் நிலையம் பின்புறம் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு புதிய அரசு ஆஸ்பத்திரி கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 50 படுக்கை வசதி மட்டுமின்றி ஈ.சி.ஜி, எக்ஸ்ரே, அறுவை சிகிச்சை மையம், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என தனித்தனி வார்டுகள், வாகன பார்க்கிங், பிணவறை உள்பட பல்வேறு வசதிகளுடன் 24 மணி நேரமும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் புதிய அரசு ஆஸ்பத்திரி அமைய உள்ளது. இதன் கட்டுமான பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்றும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கடந்த காலங்கள் முதல் தற்போது வரை உடல்நலக்குறைவு ஏற்பட்டால் ஊட்டி வரை சென்று வர வேண்டியுள்ளது. இதனால் பணம் மற்றும் நேர விரயம் ஆகிறது. மேலும் வீண் அலைச்சல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சைக்கு ஊட்டிக்கு நோயாளியை அழைத்து செல்வதற்குள் உயிரிழப்பு நிகழ்ந்துவிடுகிறது. எனவே எமரால்டு பகுதியில் அரசு ஆஸ்பத்திரி கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதனை ஏற்று தமிழக அரசு நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது. கட்டுமான பணிகளை மேலும் விரைவுபடுத்தி, ஆஸ்பத்திரியை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.