விருத்தாசலத்தில் விபத்து தறிகெட்டு ஓடிய கார் மோதல்; லாரி டிரைவர் உள்பட 2 பேர் பலி
விருத்தாசலத்தில் தறிகெட்டு ஓடிய கார் மோதிய விபத்தில் லாரி டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
விருத்தாசலம்,
வடலூர் ராகவேந்திரா சிட்டியை சேர்ந்தவர் சிவக் குமார் (வயது 50). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் துணி கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சொந்த ஊருக்கு வந்திருந்த சிவக்குமார், நேற்று காலையில் தனது காரில் வடலூரில் இருந்து ஈரோட்டிற்கு புறப்பட்டார்.
விருத்தாசலத்தில் சேலம் புறவழிச்சாலையில் பொன்னேரி என்ற இடத்தில் சென்றபோது, சிவக்குமாரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தறிகெட்டு ஓடியது.
அந்த சமயத்தில் சாலையோரத்தில் நடந்து சென்ற 2 பேர் மீது கார் மோதியது. இதில் அடுத்தடுத்து அவர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். மேலும் காரின் முன்பக்க கண்ணாடி சேதமானது. பின்னர் சிறிது தூரம் சென்று கார் நின்றது. இந்த விபத்தில் 2 பேரும் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்கள். 2 பேர் இறந்து போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவக்குமார், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். விபத்து பற்றி அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். விசாரணையில் விபத்தில் பலியானது பொன்னேரி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான ராஜேந்திரன் (வயது 45), அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா கடந்தைபட்டி கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் வரதராஜன் (35) என்பதும் தெரியவந்தது.
லாரி டிரைவரான வரத ராஜன், லாரியை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு அருகில் உள்ள ஓட்டலுக்கு நடந்து சென்ற போதும், ராஜேந்திரன் சாப்பிடுவதற்காக நடந்து சென்றபோதும் கார் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரது உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய சிவக்குமாரை தேடினர். இது பற்றி அறிந்ததும் அவர், விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.