மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த கல்லூரி மாணவி லாரி மோதி பலி தந்தை கண்முன்பே பரிதாபம்

மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த கல்லூரி மாணவி தந்தை கண்முன்பே லாரி மோதியதில் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-02-14 22:15 GMT
குடியாத்தம், 

கே.வி.குப்பத்தை அடுத்த ஆலங்கனேரி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர், முன்னாள் ராணுவவீரர். இவரது மகள் பார்கவி (வயது 18). இவர் வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு கணிதம் படித்து வந்தார்.

நேற்று காலை பார்கவி கல்லூரி செல்வதற்கு தனது தந்தை சங்கருடன் மோட்டார்சைக்கிளில் பள்ளிகொண்டாவுக்கு சென்று கொண்டிருந்தனர். பசுமாத்தூரில் இருந்து ஐதர்புரம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரியை சங்கர் முந்தி செல்ல முயன்றார்.

அப்போது திடீரென லாரி, மோட்டார்சைக்கிள் மீது உரசியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சங்கரும், அவரது மகள் பார்கவியும் கீழே விழுந்தனர். லாரி மோதியதில் பார்கவி தந்தை கண் முன்பே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சங்கர் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த சங்கரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இறந்த பார்கவியின் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்