செய்யாறு அருகே திருமணமான தகவலை ‘வாட்ஸ் அப்’பில் தெரிவித்த இளம்பெண் பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சி
செய்யாறு அருகே திருமணமான தகவலை ‘வாட்ஸ் அப்’பில் இளம்பெண் தெரிவித்ததால் பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.;
செய்யாறு,
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பிரம்மதேசம், புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலு (வயது 45), விவசாயி. இவரது மகள் கனிமொழி (21) பி.எஸ்சி. நர்சிங் முடித்துவிட்டு சென்னையில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் வேலு கடந்த 10-ந் தேதி இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் எழுந்து பார்த்தபோது வீட்டில் படுத்திருந்த கனிமொழியை காணவில்லை. மேலும் அவர் படுத்திருந்த இடத்தில் ஒரு கடிதம் இருந்தது. அதில் வாலிபர் ஒருவரை காதலிப்பதாக எழுதி வைத்துள்ளார்.
இதையடுத்து அவரை பல இடங்களில் தேடி வந்த நிலையில் வேலுவின் மைத்துனர் குமார் என்பவரின் செல்போனுக்கு அன்று மாலையே அறிமுகமில்லாத ஒரு எண்ணிலிருந்து கனிமொழி அனுப்பிய ‘வாட்ஸ் அப்’ குறுஞ்செய்தியில் எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று இருந்தது.
கனவுகளோடு வளர்த்த பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் கனிமொழி அனுப்பிய திருமணமான செல்போன் குறுஞ்செய்தியை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வேலு கொடுத்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.