போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் எம்.என்.ஆர். பாலன் எம்.எல்.ஏ பேட்டி
புதுவையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று எம்.என்.ஆர். பாலன் எம்.எல்.ஏ. கூறினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழக தலைவர் எம்.என்.ஆர். பாலன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் 290 பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆட்சி காலத்தில் முறைகேடான பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ராஜீவ்காந்தி மனித உரிமைகள் அமைப்பு கவர்னருக்கு கொடுத்த புகாரின் அடிப்படையில் முறையான பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வை சீரமைக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார். அதன்படி சுற்றுலாத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த உண்மையை மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமை, பொறுப்பு எனக்கு உள்ளது. கடந்த கால ஆட்சியில் நடைபெற்ற இந்த முறைகேடுக்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். தற்போது பதவி உயர்வை சீரமைக்க வேண்டும் என்ற நோட்டீஸ் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதே நிலை நீடித்தால் மேலும் ஒரு உத்தரவை நிறைவேற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். ஏற்கனவே முறைகேடாக பதவி உயர்வு பெற்றவர்கள் அதில் கிடைத்த ஊதியத்தையும் திரும்பபெற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தற்போது சுற்றுலா வளர்ச்சி கழகம் வளர்ந்துள்ளது. அதற்கு ஏற்ப பதவிகளை உருவாக்க வேண்டி இருக்கிறது என்பது உண்மை தான். தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு முக்கிய காரணம் நிர்வாக சீர்திருத்த துறையின் பணி விதிகளை மீறி இல்லாத பதவிகளை உருவாக்கி இருப்பது தான். எனவே ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.