பா.ஜ.க. தலைவர் அமித்ஷா இன்று ஈரோடு வருகை நெசவாளர்களுடன் கலந்துரையாடுகிறார்

பா.ஜ.க. தலைவர் அமித்ஷா இன்று (வியாழக்கிழமை) ஈரோடு வருகிறார். அவர் நெசவாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.

Update: 2019-02-13 22:45 GMT

ஈரோடு,

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்களை சந்தித்து ஆலோசனை கூறி வருகிறார்கள்.

அதன்படி ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 4 நாடாளுமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஈரோடு அருகே சித்தோட்டில் இன்று (வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு நடைபெற உள்ளது. ஈரோட்டிற்கு வரும் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தேர்தல் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளார்.

முன்னதாக பகல் 11 மணிக்கு ஈரோடு கங்காபுரம் டெக்ஸ்வேலி வளாகத்தில் நெசவாளர்கள் சந்திப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் அமித்ஷா கலந்துகொண்டு நெசவாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கட்சியின் பொதுச்செயலாளர் முரளிதரராவ், மாநில தேர்தல் பொறுப்பாளர் சி.பி.ரவி, தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.

ஈரோட்டில் அமித்ஷா வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்