கம்பத்தில், தனியார் பள்ளியில் பணம், கண்காணிப்பு கேமரா திருட்டு
கம்பத்தில் தனியார் பள்ளி அலுவலக பூட்டை உடைத்து பணம் மற்றும் கண்காணிப்பு கேமரா திருடி சென்ற மர்ம நபர் களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
கம்பம்,
கம்பம் எல்.எப்.மெயின் ரோட்டை சேர்ந்தவர் பெரோஸ் ஜாபர் குரைஷ் (வயது 49). இவர் கம்பம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு தாளாளர் பெரோஸ் ஜாபர் குரைஷ் சென்றார். அங்கு பள்ளி வளாக கதவை திறந்து அவர் உள்ளே சென்றார். பள்ளி அலுவலக அறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது, அலுவலகத்தில் வைத்திருந்த ரூ.35 ஆயிரம் திருடு போய் இருந்தது. மேலும் அந்த அறையில் இருந்து கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பொருட்களையும் மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் பெரோஸ் ஜாபர் குரைஷ் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பள்ளிக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமரா மற்றும் கம்ப்யூட்டர் உபகரணங்கள் திருடுபோய் இருந்ததால் மர்ம நபர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கம்பம் போலீசார் சார்பில் பள்ளி இருக்கும் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் உள்ள மர்ம நபர்களை அடையாளம் கண்டுபிடித்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.