கடல் நீரோட்ட மாற்றத்தால் மணல் திட்டாக மாறிய அரிச்சல்முனை

கடல் நீரோட்டத்தின் மாற்றத்தால் ராமேசுவரம் அருகே அரிச்சல்முனை கடற்பகுதி மணல் திட்டாக மாறி காட்சியளித்தது.

Update: 2019-02-10 22:45 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடிக்கும், இலங்கை தலைமன்னாருக்கும் இடையே 13 மணல் திட்டுகள் உள்ளன. இதில் 5–வது மணல்திட்டுடன் இந்திய கடல் எல்லை முடிகிறது. பெரும்பாலும் இந்த மணல் திட்டுகள் இரவு முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டும் பகல் நேரங்களில் தண்ணீர் வற்றிய நிலையிலும் காட்சியளிப்பது வழக்கம்.

இந்நிலையில் நேற்று தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் கடல் நீரோட்ட மாறுபாட்டாலும், காற்றின் வேகத்தாலும் வழக்கத்திற்கு மாறாக சுமார் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு கடல்நீர் முழுவதுமாக வற்றிய நிலையில் மணல் திட்டாக மாறி காட்சி அளித்தது.

இதனால் மணல் பரப்பாக காணப்பட்ட அங்கு கடல் பாசிகள், சங்குகள், சிப்பிகள் போன்றவை வெளியே தெரிந்தன. மேலும் இவ்வாறு கடல் நீர் வற்றி காணப்பட்டதால் அரிச்சல்முனை பகுதியில் புதிதாக மணல் திட்டு உருவானது போல் காட்சியளித்தது. மணல் திட்டு போல் இருந்த இப்பகுதியில் நாட்டுப்படகு மீனவர்கள் அங்கு படகுகளை நிறுத்தி வலைகளை சரி செய்து கொண்டிருந்தனர்.

தனுஷ்கோடி பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகஅளவில் கடல்நீர் வற்றி காணப்பட்டதுடன் மணல் பரப்பு போல் காட்சியளித்த பகுதியை ஏராளமான சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். பின்னர் மாலை 4 மணிக்கு மேல் இப்பகுதியில் வழக்கம்போல் கடல் நீர் பழைய நிலைக்கு திரும்பியது. இதுபற்றி மீனவர்கள் கூறும்போது, கஜா புயலுக்கு பின்னர் தனுஷ்கோடி கடல் பகுதியில் கடல் நீரோட்டம் மாறுபட்டு உள்ளது. இதனால் தான் கடல் நீர் அடிக்கடி வற்றிய நிலையில் காட்சியளிக்கிறது என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்