பனஞ்சாயல் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க புதிய ஆழ்குழாய் அமைக்க வேண்டும் கிராம மக்கள் வலியுறுத்தல்

திருவாடானை தாலுகா பனஞ்சாயல் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க புதிய ஆழ்குழாய் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2019-02-10 22:27 GMT

தொண்டி,

திருவாடானை தாலுகா பனஞ்சாயல் ஊராட்சியில் நாவலூர், விருதன்வயல், கீழப்பனஞ்சாயல், புதுக்குடி, அடஞ்சாமங்கலம், குஞ்சிரான்வயல் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 2,800–க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி கிராமங்களுக்கு மங்கலக்குடி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மங்கலக்குடியில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தூரம் கடந்து வருவதால் குடிநீர் வந்து சேருவதற்கு பெரும் சிரமமாக உள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய்களில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பல இடங்களில் வீணாகி விடுகிறது. இந்த தண்ணீரை சீராக கடத்துவதற்கு தரைமட்ட தொட்டிகளும் இல்லை.

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை பனஞ்சாயல் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் தினமும் குடிநீருக்காக பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் குடிநீருக்காக பல மைல் தூரம் சென்று எடுத்து வரும் அவல நிலை இருந்து வருகிறது.

எனவே இந்த ஊராட்சி கிராமங்களுக்கு குடிநீர் முறையாக வினியோகம் நடைபெற பனஞ்சாயல் கிராமத்தை மையமாகக்கொண்டு பெரிய ஆழ்குழாய் அமைத்து அதில் இருந்து அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்ய மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஊராட்சி தலைவர் மோகன்ராஜ் மற்றும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பி வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்