காரில் சோதனை நடத்தியதால் கல்வீசி தாக்கிய கும்பல் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
சோலாப்பூரில் காரில் சோதனையிட்ட போது 5 பேர் கும்பல் போலீசாரை கல்வீசி தாக்கியது. பதிலுக்கு போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார்.
புனே,
சோலாப்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அதிகாலை 3.30 மணியளவில் உலேகாவ் பகுதியில் அவர்கள் வந்த போது, சந்தேகத்திற்கிடமாக கார் ஒன்று வருவதை கவனித்தனர். அந்த காரில் 5 பேர் இருந்தனர்.
போலீசார் அந்த காரை வழிமறித்து நிறுத்தி அவர்களை கீழே இறக்கி சோதனை போட்டனர். அப்போது காருக்குள் ஆயுதங்கள் மற்றும் எளிதில் தீப்பற்றி எரியும் பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக அவர்களிடம் விசாரித்த போது, அந்த கும்பலை சேர்ந்தவர்கள் திடீரென போலீசாரை நோக்கி அங்கு கிடந்த கற்களை தூக்கி வீசி தாக்குதல் நடத்தினர்.
மேலும் போலீசாரை பிடித்து சரமாரியாக தாக்கினார்கள். இதனால் போலீசாருக்கும், அந்த கும்பலை சேர்ந்தவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் உண்டானது.
அந்த கும்பலின் தாக்குதல் தீவிரமானதால் போலீசார் பதிலுக்கு அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவரின் உடலில் குண்டு பாய்ந்தது.
இதை பார்த்ததும் அந்த கும்பலை சேர்ந்த மற்றவர்கள் காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். குண்டுபாய்ந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தவரை போலீசார் மீட்டு மருத்துமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல் கும்பல் தாக்கியதில் காயம் அடைந்த போலீசார் 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்த விவரங்கள் தெரியவில்லை.
இந்த நிலையில் போலீசார் மர்ம கும்பல் விட்டுச்சென்ற காரில் சோதனை நடத்தியபோது அதில் இருந்து வீட்டை உடைக்க பயன்படுத்தும் பொருட்கள், ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் மூலம் அவர்கள் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தப்பியோடிய ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.