நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி அளித்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார். வேணுகோபால் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறுணியம் பலராமன், நரசிம்மன், திருவள்ளூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் கமாண்டோ பாஸ்கரன், முன்னாள் எம்.எல்.ஏ. மணிமாறன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் காட்டுப்பாக்கம் திருநாவுக்கரசு, பால் கூட்டுறவு சங்க தலைவர் சந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சிற்றம் ஜெ.சீனிவாசன், கடம்பத்தூர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் ஆட்சி மொழி, கலை பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு 509 பயனாளிகளுக்கு தாலிக்கு 8 கிராம் தங்கமும், உதவித் தொகையையும், 250 மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்களையும், மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிய வங்கி கடன் மானியமாக 3 பயனாளிகளுக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பிலும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட சமூக நல அலுவலர் மீனா, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் குபேந்திரன் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த திரளான அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
பின்னர் அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் நலனை கருத்தில்கொண்டு பல சீரிய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் இந்த அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறது. கூட்டணி வைத்தாலும், வைக்காவிட்டாலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் மக்களின் பேராதரவோடு அபார வெற்றிபெறும். இவ்வாறு அவர் கூறினார்.