மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.

Update: 2019-02-10 23:00 GMT
கிருஷ்ணகிரி, 

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி 2019 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு பயிற்சி பெற்ற அலுவலர்கள் மூலம் கிராமங்கள் தோறும் வரும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு முகாம்கள் நடைபெறுகிறது.

இதற்காக, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் அனுப்பி வைத்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி பையனப்பள்ளி தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வைப்பறையில் இருந்து மின்னணு எந்திரங்கள் 10 ஒன்றியங்களிலும், ஒவ்வொரு தாலுகா அலுவலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் 7 வாகனங்கள் வீதம் 6 சட்டமன்ற தொகுதிக்கு 42 வாகனங்கள் நாள் ஒன்றிற்கு 4 வாக்குச்சாவடி மைய அமைவிடம் வீதம் 168 வாக்குச்சாவடி அமைவிடங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

இந்த விழிப்புணர்வு முகாமில் பொதுமக்கள் தாங்கள் வாக்களித்த விவரத்தை தெளிவாக காட்டும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி, வாக்காளர் வாக்களித்த வேட்பாளரின் வரிசை எண், பெயர் மற்றும் வேட்பாளரின் சின்னம் ஆகிய விவரங்களை உள்ளடக்கிய அச்சிட்ட தாளை 7 வினாடிகளுக்கு பார்க்க அனுமதிக்கும்.

இந்த எந்திரம், நீங்கள் தேர்வு செய்து வாக்களித்த வேட்பாளருக்குத்தான் உங்கள் வாக்கு செலுத்தப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யவும், சரிபார்க்கவும் அனுமதிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்