விஜயாப்புரா அருகே ஆட்டோ-லாரி மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி கோவில் திருவிழாவுக்கு சென்ற போது சோகம்

விஜயாப்புரா அருகே ஆட்டோ, லாரி மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் கோவில் திருவிழாவுக்கு சென்ற போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Update: 2019-02-10 22:45 GMT
பெங்களூரு, 

விஜயாப்புரா மாவட்டம் பரடகிதாண்டே கிராமத்தின் அருகே சம்பவத்தன்று மாலையில் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் வந்த லாரியும், ஆட்டோவும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதனால் ஆட்டோ சாலையோரம் கவிழ்ந்தது. இதற்கிடையே, லாரியை சாலையில் விட்டுவிட்டு அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

மேலும், ஆட்டோவில் இருந்த 2 பெண்கள், 2 குழந்தைகள் மற்றும் டிரைவர் ஆகியோர் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து அறிந்தவுடன் விஜயாப்புரா புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் பலியான 5 பேரின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், இறந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், இறந்தவர்கள் பசவனபாகேவாடி தாலுகா டோனூரு கிராமத்தை சேர்ந்த அரவிந்த் அகசரா (வயது 32), அவருடைய மனைவி சுனிதா அகசரா (26), இந்த தம்பதியின் 2 மற்றும் 3 வயது நிரம்பிய 2 குழந்தைகள், சுனிதா அகசராவின் தாய் கங்கா பாய் (53) என்பதும் தெரிய வந்தது.

இவர்கள் டோனூரு கிராமத்தில் இருந்து இச்சகேரி கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்துகொள்ள ஆட்டோவில் சென்றதும், ஆட்டோவில் அரவிந்த் அகசரா ஓட்டியதும் தெரியவந்தது. இதுகுறித்து விஜயாப்புரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள லாரி டிரைவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்