மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த 28 குழுக்கள் அமைப்பு

ராமநாதபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய எந்திரங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த 28 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-02-09 22:56 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்டத்துக்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய எந்திரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 28 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனை தொடங்கி வைத்து மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் கூறியதாவது:– இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் சுருக்க திருத்தம்–2019–ன் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 11,22,589 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் பணிகளுக்காக 784 இடங்களில் 1,367 வாக்குச்சாவடி மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதேபோல தேர்தல் பணிகளுக்காக 3,310 மின்னணு வாக்கு செலுத்தும் எந்திரங்கள் மற்றும் 1,800 வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,800 வாக்காளர் சரிபார்க்கக்கூடிய தணிக்கை எந்திரங்கள் ஆகியவற்றில் முதல்நிலை சோதனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அதன் அடிப்படையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய தணிக்கை எந்திரங்களின் செயல்பாடு மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும்.

இதற்காக மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் தலா 7 குழுக்கள் வீதம் மொத்தம் 28 விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தாசில்தார், துணை தாசில்தார், துணை வட்டார வளர்ச்சி நிலை அலுவலர் தலைமையில் 1 உதவியாளர், 2 அலுவலக உதவியாளர்கள், 1 காவலர் உட்பட 5 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழு அலுவலர்கள் அந்தந்த தொகுதி வாரியாக வாக்குச்சாவடி மையங்களுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 784 இடங்களுக்கும் நேரடியாக சென்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், வாக்காளர் சரிபார்க்கக்கூடிய தணிக்கை எந்திரங்கள் ஆகியவற்றின் மூலம் செயல்முறை விளக்கமளித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். இப்பணிகளானது 5 நாட்கள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, பரமக்குடி சப்–கலெக்டர் விஷ்ணுசந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் மதியழகன், கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கண்ணபிரான் உள்பட தேர்தல் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்