பெற்றோர், ஆசிரியர்கள் மாணவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும் நீதிபதி ரமேஷ் பேச்சு

பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும் என நீதிபதி எம்.எஸ். ரமேஷ் பேசினார்.

Update: 2019-02-09 22:31 GMT

மதுரை,

மதுரை ஸ்ரீஅரபிந்தோ மீரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 23–வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. பள்ளி இயக்குனர் அபிலாஷ் வரவேற்புரை நிகழ்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி தாளாளர் சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஐகோர்ட்டு நீதிபதி எம்.எஸ். ரமேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். விழாவில் நீதிபதி எம்.எஸ். ரமேஷ் பேசும்போது கூறியதாவது:–

மாணவர்கள் சிறிய அளவில் ஏதாவது செய்தால் கூட பெற்றோர்களும், ஆசிரியர்களும் அதனை ஊக்குவிக்க வேண்டும். தொடர்ந்து அவர்களை ஊக்குவிப்பதன் மூலம் அவர்களுக்குள் இருக்கும் தன்னம்பிக்கையை அதிகரிக்க முடியும். மாணவர்கள் அவர்களுக்கான லட்சியத்தை நிர்ணயித்துக் கொண்டு, அதை நோக்கி நகர வேண்டும். தற்போதைய காலக்கட்டத்தில் ஏராளமான தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. அந்த தொழில்நுட்பங்களை தங்களின் வளர்ச்சிக்கு ஏற்றார்போல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் அனைவரும் திறமை மிக்கவர்கள். அவர்களுக்கான படிப்பை அவர்களே தேர்வு செய்யும் அளவிற்கு திறன் பெற்றிருக்கிறார்கள். எனவே பெற்றோர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து ஊக்குவிக்க வேண்டுமே தவிர, அவர்களுக்கான படிப்பை தேர்வு செய்யக்கூடாது. என்ன படித்தால் என்ன சாதிக்கலாம் என்பதை மாணவர்களே முடிவு செய்து கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பேசும்போது, மாணவர்கள் அனைவருக்கும் தனித்தனி அற்புத திறமைகள் இருக்கிறது. அது என்ன என்பதை மட்டுமே பெற்றோர்கள் கண்டறிய வேண்டும். மாணவர்களை அவர்கள் போக்கில் விட்டு விட்டால் அவர்கள் நிச்சயம் சாதிப்பார்கள். முயற்சி செய்தால் சாதிக்க முடியும் என்பதை மாணவர்களுக்கு அறிவுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குனர் நிக்கி ப்ளோரா, டீன் பரத், முதல்வர் மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மாணவ–மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதுபோல், ஸ்ரீஅரபிந்தோ மீரா யுனிவர்சல் பள்ளியின் 4–வது ஆண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதி, திரைப்பட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்