ரபேல் போர் விமான ஒப்பந்தம் விமானப்படையை வலுப்படுத்தவா? தொழில் அதிபர் பயன் அடையவா? மோடிக்கு சிவசேனா கேள்வி

ரபேல் போர் விமான ஒப்பந்தம் விமானப்படையை வலுப்படுத்த போடப்பட்டதா? அல்லது தொழில் அதிபர் பலன் அடையவா? என்று பிரதமர் மோடிக்கு சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.;

Update: 2019-02-09 23:15 GMT
மும்பை,

இந்தியாவின் விமானப்படைக்கு ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான பேரத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டு சுமத்தி வருகிறார்.

குறிப்பாக, ரபேல் போர் விமான தயாரிப்பில், பிரான்ஸ் நிறுவனமான ‘டசால்ட்’ நிறுவனத்துடன் இணைந்து செயல்பட இந்தியாவின் அனில் அம்பானி நிறுவனத்தை பிரதமர் மோடி தேர்வு செய்து, அந்த நிறுவனத்துக்கு சாதகமாக நடந்துள்ளதாக ராகுல் காந்தி புகார் கூறுகிறார்.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி ராகுல்காந்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பரபரப்பாக பேசினார். ஆதாரம் இல்லாமல் அரசை குறை சொல்வதா? என்று கேள்வி எழுப்பினார்.

இந்தநிலையில் ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பிலான ரபேல் போர் விமான பேரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தபோது, அதற்கு இணையாக பிரதமர் அலுவலகம் ஒரு பேச்சுவார்த்தை நடத்தியதற்கு ராணுவ அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது என்று ஆங்கில நாளேடு ஒன்றில் மறுநாள் செய்தி வெளியானது.

இதையடுத்து ரபேல் விவகாரம் மீண்டும் பூதாகரமானது. ரபேல் பேரத்தில் மோடிக்கு நேரடி தொடர்பு இருப்பதாக ராகுல்காந்தி பரபரப்பு குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரம் குறித்து பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா தனது கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் கேள்வி எழுப்பி உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை நியாயப்படுத்தி தேச பற்று குறித்து உரை நிகழ்த்தினார். அடுத்த நாளிலேயே ஒரு நாளிதழில் ‘கருப்பு பக்கம்’ வெளி வந்ததும் தேசப்பற்று குறித்து பேசிய குரல்களும், மேஜைகளை தட்டி எழுப்பிய சத்தங்களும் அமைதியாகிவிட்டன.

இந்த ஒப்பந்தம் மூலம் பிரதமர் மோடி இந்திய விமானப்படையை வலுப்படுத்த முயன்றாரா? அல்லது நிதிப்பிரச்சினையில் சிக்கிய தொழிலதிபரை வலுப்படுத்த முயன்றாரா?. இதற்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்.

பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசியபோது காங்கிரஸ் கட்சி ராணுவத்தை பலப்படுத்த விரும்பவில்லை என பலமுறை கூறினார். அடுத்த நாளே வெளியாகியிருக்கும் ஆவணங்கள் மூலம் பிரதமர் மோடி இந்த ரபேல் ஒப்பந்தத்தில் எந்த அளவிற்கு தனிப்பட்ட விருப்பத்தை காட்டியிருக்கிறார் என்பது வெளிச்சமாகி உள்ளது.

மோடி ரபேல் ஒப்பந்தத்தை நேரடியாக கையாண்டுள்ளார். ராணுவ மந்திரி மற்றும் ராணுவ அமைச்சகத்தை புறம் தள்ளிவிட்டு, ரபேல் போர் விமான விலை மற்றும் யாருக்கு ஒப்பந்தம் வழங்கவேண்டும் என்பதை தனிப்பட்ட முறையில் மோடி முடிவு செய்துள்ளார்.

எனவே அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களை அவர் எதிர்கொள்ள வேண்டும்.

தேசிய பாதுகாப்பு குறித்த விவகாரத்தில் கேள்வி கேட்பது எப்படி நாட்டை விமர்சிப்பதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்