வெள்ளத்தில் செல்லும் வகையில் ஆம்புலன்ஸ் தயாரிக்கப்படுகிறது அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தற்போது வெள்ளத்தில் செல்லும் வகையில் ஆம்புலன்ஸ் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2019-02-09 23:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்துறை அகநோக்கிகள் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, பல்துறை அகநோக்கிகளை திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம், நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து பல்வேறு புதிய மருத்துவ பிரிவுகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தற்போது அரசு மருத்துவக்கல்லூரியில் இரைப்பை பரிசோதனை, பெருங்குடல், பித்தப்பை, கணையம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில் ரூ.2 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் பல்துறை சேர்ந்த 15 அகநோக்கிகள் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு தமிழக சுகாதாரத்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.12 ஆயிரத்து 563 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் உலக வங்கி நிதியின் கீழ் ரூ.2 ஆயிரத்து 645 கோடியும், ஜப்பான் நாட்டின் ஜெயிக்கா திட்டத்தின் கீழ் ரூ.ஆயிரத்து 645 கோடியும், மத்திய அரசின் நிதியாக ரூ.2 ஆயிரத்து 650 கோடி நிதியும் பெறப்பட்டு உள்ளன. இதன் மூலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நோயைக் கண்டறிவதற்கு அதி நவீன உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆரம்ப கட்டத்திலேயே நோயை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

சுகாதாரத்துறையின் கீழ் 108 ஆம்புலன்ஸ், இருசக்கர வாகன ஆம்புலன்ஸ், கடற்கரை மணல் மற்றும் மலைகளில் செல்லக்கூடிய ஆம்புலன்ஸ் போன்றவை தற்போது பயன்பாட்டில் உள்ளது. தற்போது வெள்ளத்தில் செல்லும் வகையில் சோதனை முயற்சியாக ஆம்புலன்ஸ் தயாரிக்க சென்னை ஐ.ஐ.டி. நிறுவனத்திற்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டு தற்பொழுது ஆம்புலன்ஸ் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆம்புலன்ஸ் பயன்பாட்டிற்கு வரும் பொழுது இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்