மாவட்டத்தில் 5.84 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் 5 லட்சத்து 84 ஆயிரம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.;
நாமக்கல்,
குடற்புழுவால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை தடுப்பதற்காக ஆண்டுதோறும் 1 முதல் 19 வயதுடைய அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகளை பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தமிழக அரசு இலவசமாக வழங்கி வருகின்றது.
நாமக்கல் மாவட்டத்தில் குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்குவதற்கான தொடக்க நிகழ்ச்சி எர்ணாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இதில் கலெக்டர் ஆசியா மரியம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி பேசியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1 வயது முதல் 19 வயது வரை உள்ள 5 லட்சத்து 84 ஆயிரத்து 314 நபர்களுக்கு ஒரே நாளில் குடற்புழு நீக்கும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு குடற்புழுவால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு தடுக்கப்படும். குறிப்பாக ரத்தசோகை குறைபாடு வராமல் தடுக்கப்படும்.
இதனால் மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவதோடு விளையாட்டு போன்ற இதர நடவடிக்கைகளிலும் அதிக ஊக்கம் மற்றும் புத்துணர்வுடன் பங்கேற்கலாம். மேலும் கைகழுவும் பழக்கத்தை மாணவ, மாணவிகள் தொடர்ந்து மேற்கொள்வதோடு, தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களும் மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும். இதன் மூலமாக சுகாதாரமான நோயற்ற முன்னோடி மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தை உருவாக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் குடற்புழு நீக்க கையேட்டினை கலெக்டர் வெளியிட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்குமார் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாணிக்கம்பாளையம் அரசு துணை செவிலியர் பயிற்சி கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சுத்தமாக கை கழுவும் முறை குறித்து மாணவ, மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில் எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன், உதவி இயக்குனர் நக்கீரன், தாய்சேய் நல அலுவலர் கலைவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.