வாக்குசாவடி மையங்களுக்கு சரிபார்ப்புடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்கு சாவடி மையங்களுக்கு சரிபார்ப்புடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை கலெக்டர் நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார்.

Update: 2019-02-09 22:15 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு சரிபார்ப்புடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து பொதுமக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து நகர், கிராமப்புறங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான நிர்மல்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்குப்பதிவு சரிபார்ப்புடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதனை பற்றி அறியும் வண்ணம் அனைத்து வாக்குசாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

எனவே வாக்குசாவடி மையங்கள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வாக்குப்பதிவு சரிபார்ப்புடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படுகிறது. மேலும் இதனை எவ்வாறு கையாள்வது என்பதை செய்முறையாக வாக்களித்து அறிந்து கொள்ளலாம்.

ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 அலுவலர்கள் அடங்கிய 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குசாவடி மையங்கள் அடங்கிய நகர், கிராமப்புறங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும்.

பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களித்து பரிசோதனை செய்து, தங்களது சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் உதவி கலெக்டர் முருகதாஸ், தாசில்தார் சொக்கநாதன் (தேர்தல்), குணசீலி ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்