சேலத்தில் சந்து கடைகளை அகற்றக்கோரி சாலை மறியல்-மதுபாட்டில்கள் உடைப்பு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சேலத்தில் சந்து கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் மதுபாட்டில்கள் உடைக்கப்பட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-02-09 23:15 GMT
சூரமங்கலம், 

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக 4 சந்து கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதாவது, அரசு டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி இங்கு கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த கடைகளில் மதுவை வாங்கி குடிக்கும் மதுபிரியர்கள், சாலையில் நின்று கொண்டு அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறு செய்து வருகின்றனர். இதனால் இந்த சந்து மதுக்கடைகளை அகற்றக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனிடையே நேற்று முன்தினம் சந்து மதுக்கடை நடத்தி வரும் ஒருவரின் மகனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜூ என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் ராஜூவை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்றுவிட்டார். சந்து கடைகள் இருப்பதால் தான் நாளுக்குநாள் பிரச்சினை அதிகமாக வருகிறது என்று அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குரங்குசாவடி பகுதியில் திரண்டனர். பின்னர் அவர்கள் சந்து மதுக்கடைகளை அகற்றக்கோரி அங்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் துணை கமிஷனர் சியாமளாதேவி தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

இதையடுத்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கலெக்டர் இங்கு வந்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சந்து மதுக்கடைகளை அகற்ற உத்தரவிட்டால் மட்டுமே நாங்கள் மறியலை கைவிடுவோம் என்று போலீசாரிடம் பொதுமக்கள் கூறினர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஒருவழியாக சந்து மதுக்கடைகளை அகற்ற அனைத்து நடவடிக்கையும் உடனடியாக எடுக்கப்படும் என்று அவர்களிடம் போலீசார் உறுதியளித்தனர். இதனால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சாலையில் இருபுறங்களிலும் நீண்ட தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒரு மணி நேர போராட்டத்தால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மறியல் முடிந்ததும் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து ஜாகீர் அம்மாபாளையத்தில் இருந்த 4 சந்து மதுக்கடைகளையும் போலீசார் அகற்றி நடவடிக்கை எடுத்தனர். அங்கிருந்த ஆயிரக்கணக்கான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது சிலர் அங்கு கிடந்த காலி மதுபாட்டில்களை எடுத்து ரோட்டில் வீசி உடைத்தனர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘கடந்த 20 ஆண்டு காலமாக இந்த பகுதியில் உள்ள சந்து கடைகளில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இவற்றை அகற்றக்கோரி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எந்த நேரமும் மதுபானம் விற்கப்படுவதால் மாணவர்கள் உள்பட பலர் இங்கு வந்து மதுகுடித்துவிட்டு செல்கின்றனர். எனவே இதை அகற்றுவதற்காக சாலை மறியல் போராட்டம் நடத்தினோம்.

மேலும் சந்து கடைகள் செயல்பட்டு வரும் ஜாகீர்அம்மாபாளையம் பகுதியில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடு உள்ளது. எனவே முக்கியமான பகுதியாக திகழும் இந்த பகுதிகளில் சந்து கடைகள் நடத்த போலீசார் அனுமதிக்க கூடாது. அவர்கள் அதிரடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’ என்றனர்.

மேலும் செய்திகள்