மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பிரசார வாகனங்கள் கலெக்டர் தொடங்கி வைத்தார்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனங்களை கலெக்டர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்,
தேர்தலின் போது, பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகிறது. அதாவது இந்த எந்திரங்களில் முறைகேடு செய்து தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முடியும் என எதிர்க்கட்சிகள் தொடக்கம் முதலே குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில், வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகதன்மை குறித்து ஒவ்வொரு வாக்குச்சவடி மையங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன், வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான எந்திரம் பயன்படுத்திட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்தந்த பகுதி வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.
அதன் அடிப்படையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தையும், வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும்எந்திரத்தையும் இயக்குவது குறித்து பிரசார வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய 11 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 7 குழுக்கள் வீதம் மொத்தம் 77 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குழுவிலும் மொத்தம் 5 அலுவலர்கள் உள்ளனர். ஒரு குழுவினர் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 4 வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று பொதுமக்களிடையே மாதிரி வாக்குப்பதிவு நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.
அந்த வகையில் விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் எந்திரங்கள் அடங்கிய 5 பிரசார வாகனங்களை நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து கலெக்டர் சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் இந்த விழிப்புணர்வு முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் எந்திரத்தின் செயல்பாடு குறித்து மாதிரி வாக்குப்பதிவு நடத்தி தெரிந்து கொள்ளலாம் என்றார்.
அப்போது தாசில்தார் சையத்மெகமூத், தேர்தல் தனி தாசில்தார் சீனிவாசன், மண்டல துணை தாசில்தார்கள் கண்ணன், வெங்கட்ராஜ், வருவாய் ஆய்வாளர் வெங்கடபதி ஆகியோர் உடனிருந்தனர்.