கொளத்தூர் அருகே காவிரி ஆற்றில் பெண் பிணம் கொலை செய்து உடலில் கல்லை கட்டி வீசிய கொடூரம்
கொளத்தூர் அருகே காவிரி ஆற்றில் பெண் பிணம் மிதந்தது. அவரை கொலை செய்து உடலில் கல்லை கட்டி வீசி விட்டு சென்றுள்ளனர்.
கொளத்தூர்,
இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே சுப்பிரமணியபுரம் கருங்கரடு காவிரி ஆற்றில் நேற்று சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் நிர்வாண நிலையில் தண்ணீரில் மிதந்தது. இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து காவேரிபுரம் கிராம நிர்வாக அதிகாரி பழனிசாமி கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன்பேரில் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு நிர்வாண நிலையில் பெண்ணின் உடல் தண்ணீரில் மிதந்ததுடன், உடலில் கயிற்றால் கல்லை கட்டி ஆற்றில் தூக்கி வீசப்பட்டிருப்பதை பார்த்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர், அவரை கொலை செய்தது யார்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் தகவல் அறிந்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
இது குறித்து போலீசார் கூறுகையில், பிணமாக கிடந்த பெண்ணுக்கு சுமார் 35 வயது இருக்கலாம். அந்த பெண்ணை கற்பழித்து கொலை செய்து இருக்கலாம். உடலில் நெஞ்சு பகுதி முதல் அடிவயிறு கத்தியால் கிழித்து குடல் உள்ளிட்டவற்றை எடுத்து விட்டு, வயிற்றில் கல்லை கட்டி ஆற்றில் போட்டுள்ளனர். தற்போது கொளத்தூர் காளையனூரை சேர்ந்த பழனியம்மாள் என்ற பெண் மாயமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் பிணமாக கிடந்தவர் அவரா? என விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினார்கள்.