அதிக கட்டணம் வசூல்: சுகாதார வளாக ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் கிருஷ்ணகிரி கலெக்டர் நடவடிக்கை
அதிக கட்டணம் வசூலித்ததுடன், சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்டதற்காக கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலைய கட்டண சுகாதார வளாக ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இந்த பஸ் நிலையத்தில் உள்ள கட்டண சுகாதார வளாகத்தில், நகராட்சியால் நிர்ணய ம் செய்யப்பட்ட கட்டணத்தை விட பன்மடங்கு கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.
இது தொடர்பாக நகராட்சியில் பயணிகள் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் நகராட்சி மூலம் கட்டண சுகாதார வளாகத்தின் வெளியே கட்டண விவரங்கள் எழுதி வைக்க வேண்டும் என ஒப்பந்தம் எடுத்தவர்களுக்கு நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். ஆனால், கட்டணம் விவரம் எழுதப்பட்ட இடத்தினை பொருட்களை கொண்டு மறைத்து, பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் பிரபாகர் நேற்று பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அவர் கட்டண சுகாதார வளாகம் உள்ள பகுதியை ஆய்வு செய்தார். அந்த நேரம் அங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். மேலும் சுகாதார வளாகங்களை முறையாக பராமரிக்காமல் அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்டது.
இதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்களை கண்டித்த கலெக்டர் பிரபாகர், பஸ் நிலைய கட்டண சுகாதார வளாகத்தின் ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க உத்தரவிட்டார். இது குறித்து நகராட்சி ஆணையாளர் ரமேஷ் கூறியதாவது:- கூடுதல் கட்டணம் வசூலித்த ஒப்பந்ததாரருக்கு முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அதன் பின்னர் ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.