பார்சல் நிறுவன ஊழியரை தாக்கி 5¾ கிலோ நகையை கொள்ளை அடித்தது வடமாநில கும்பலா? போலீசார் விசாரணை
பார்சல் நிறுவன ஊழியரை தாக்கி 5¾ கிலோ நகையை கொள்ளை அடித்தது வடமாநில கும்பலா? என்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை பீளமேடு அருகே பார்சல் நிறுவன ஊழியர் பிருத்வி சிங்கை(வயது 26) தாக்கி அவரிடம் இருந்து 5¾ கிலோ தங்க நகைகள், 1½ கிலோ வெள்ளி நகைகள், 125 கிராம் வைர நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச்சென்றனர். இவற்றின் மதிப்பு ரூ.1½ கோடியாகும்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவினாசி சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.அதில் மும்பைக்கு விமானத்தில் அனுப்புவதற்காக பிருத்விசிங் நகைகளை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றபோது அவரை மற்றொரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் பின் தொடர்ந்து செல்வதும், அதில் 2 பேர் ஹெல்மெட் அணிந்திருந்ததும் பதிவாகி இருந்தது.
ஹெல்மெட் அணியாமல் இருந்த ஒருவரின் புகைப்படத்தை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். பிருத்வி சிங் மற்றும் அவருடன் வேலை பார்க்கும் நிறுவன ஊழியர்கள், நகைகளை மும்பைக்கு அனுப்பிய தங்க நகை வியாபாரிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
பிருத்வி சிங் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 2 வருடங்களாக பார்சல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் அதிகாலை நேரத்தில் தனியாக மோட்டார் சைக்கிளில் நகைகளை கொண்டு செல்வதை அறிந்தே கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.
எனவே பிருத்வி சிங்கின் அன்றாட நடவடிக்கைகளை தெரிந்தவர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என கருதிய போலீசார் அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் ஏற்கனவே நடைபெற்ற நகை கொள்ளைகளில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளின் பட்டியலை ஆய்வு செய்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவையில் ஏற்கனவே நடந்த ஏ.டி.எம். கொள்ளை, நூதன முறையில் வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களில் வடமாநிலங்களை சேர்ந் தவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்திலும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகித்த போலீசார் கோவையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட லாட்ஜ்களில் சோதனை நடத்தி விசாரித்தார்கள்.
கடந்த சில நாட்களாக தங்கியிருந்தவர்களின் பட்டியலை கேட்டு வாங்கிய போலீசார் சந்தேகத்திற்கிடமாக யாராவது வந்து சென்றார்களா? எனவும் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சுமித்சரண் கூறும்போது, இந்த கொள்ளையில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நகை கொள்ளையில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை தனிப்படையினர் ஆய்வு செய்வதுடன், இந்த கொள்ளை தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளை தொடர்பாக சில தடயங்களும் சிக்கி உள்ளன. கொள்ளையர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்று தெரிவித்தார்.