திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா இன்று தொடங்குகிறது யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா வந்தது.
மாசித்திருவிழா
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மாசித்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, நேற்று மாலையில் யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா வந்தது.
இதையொட்டி திருச்செந்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் 12–ம் திருவிழா மண்டபத்தில் சிதம்பர தாண்டவ விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் சரவணன் அய்யர் கொடிப்பட்டத்தை ஏந்தியவாறு, கோவில் தெய்வானை யானை மீது அமர்ந்து, 8 வீதிகளிலும் வலம் வந்து கோவிலை சேர்ந்தார்.
19–ந் தேதி தேரோட்டம்
விழாவில் கோவில் இணை ஆணையர் பாரதி, ஓய்வு பெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், கோவில் கண்காணிப்பாளர்கள் ராஜமோகன் (வருவாய்), கார்த்திகேயன் (உள்துறை), மேலாளர் விஜயன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கிட்டு சுப்பிரமணியன், மணியம் ரமேஷ், 14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின்முறை சங்க செயலாளர் அய்யனார், பொருளாளர் மாரியப்பன், ஸ்தலத்தார் சபை தலைவர் குமார், செயலாளர் சுப்பிரமணியன், கைங்கர்ய சபா தலைவர் சேது ஆண்டி, செயலாளர் விசுவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி–அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10–ம் திருநாளான வருகிற 19–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.