தூத்துக்குடியில் வாக்குப்பதிவு எந்திரம் குறித்து விழிப்புணர்வு வாகன பிரசாரம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் வாக்குப்பதிவு எந்திரம் குறித்து விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

Update: 2019-02-09 22:30 GMT

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் வாக்குப்பதிவு எந்திரம் குறித்து விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

விழிப்புணர்வு வாகன பிரசாரம் தூத்துக்குடி

காய்கறி மார்க்கெட் ரவுண்டானா பகுதியில் தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர் ஒப்புகை சீட்டு எந்திரம் தொடர்பான வாகன விழிப்புணர்வு பிரசாரம் நேற்று தொடங்கியது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கொடி அசைத்து பிரசாரத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது;–

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள 1,593 வாக்குச்சாவடி மைய பகுதிகளில் விழிப்புணர்வு வாகனங்கள் மூலம் வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர் ஒப்புகை சீட்டு எந்திரம் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சிகள் இன்று முதல் (அதாவது நேற்று) 13–ந் தேதி வரை 5 நாட்கள் நடத்தப்பட உள்ளது.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் இந்த விழிப்புணர்வு பணிகளுக்கு தலா 6 விழிப்புணர்வு வாகனங்கள் என மொத்தம் 36 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு வாகனத்தில் 4 ஊழியர்கள் மற்றும் காவலர் உள்பட 5 நபர்கள் உள்ளனர். எந்தெந்த இடங்களில் விழிப்புணர்வு பயிற்சி நடைபெறும் என்ற விவரம் தாசில்தார் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வாக்குச்சாவடி மையங்களில் ஒட்டப்பட்டு உள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குப்பதிவு செய்தல் மற்றும் வாக்குப்பதிவு செய்தவுடன் ஒப்புகை சீட்டினை பார்வையிடுதல் குறித்து பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் விழிப்புணர்வு பயிற்சி நடைபெறும்.

விழிப்புணர்வு

இதன்மூலம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தல், வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே விளக்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இளம் வாக்காளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்றைய தினம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் யாருக்கு வாக்கு செலுத்தினோம் என்பதை அறியும் வகையில் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு எந்திரம் ஆகியவற்றின் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான் ஜித்சிங் கலோன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்