கடலூரில் நள்ளிரவில் விபத்து, தடுப்புக்கட்டை மீது பஸ் மோதல்; 26 பேர் படுகாயம்
கடலூரில் தடுப்புக்கட்டை மீது பஸ் மோதியதில் 26 பேர் பலத்த காயமடைந்தனர். நள்ளிரவில் நடந்த இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:-
கடலூர்,
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று இரவு ஒரு பஸ் புறப்பட்டது. புதுச்சேரி அரசுக்கு சொந்தமான அந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பஸ்சை டிரைவர் மோகன்ராஜ் ஓட்டிச் சென்றார். கண்டக்டர் மந்திரமூர்த்தி என்பவர் பணியில் இருந்தார்.
நள்ளிரவு கடலூர் இம்பீரியல் சாலையில் அந்த பஸ் வந்த போது, பிரபல ஜவுளிக்கடை முன்பு சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புக்கட்டை மீது திடீரென மோதி விபத்துக்குள்ளா னது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. மேலும் பஸ்சில் பயணம் செய்த ராஜ்குமார் (வயது 47), புதுச்சேரி மணி, ஸ்டாலின், வேதாரண்யம் சந்திரா(58), தேவிகா (60), டிரைவர் மோகன்ராஜ், கண்டக்டர் மந்திரமூர்த்தி உள்பட 26 பேர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சு மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ராஜ்குமார் உள்பட 11 பேர் மட்டும் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.