மண்டபத்தில் மத்திய அதிவிரைவு படையினர் கொடி அணிவகுப்பு முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்

மண்டபத்தில் மத்திய அதிவிரைவு படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது முக்கிய வீதிகள் வழியாக வீரர்கள் சென்றனர்.

Update: 2019-02-08 21:58 GMT

பனைக்குளம்,

மாவட்டத்தில் பதட்டமான பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு மத்திய அதிவிரைவு படை மூலம் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவையில் இருந்து 40 பேர் கொண்ட மத்திய அதிவிரைவு படையினர் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வந்துள்ளனர். இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் மண்டபத்தில் நேற்று மத்திய அதிவிரைவு படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மண்டபம் போலீஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பை போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் மண்டபம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ரெயில் நிலையம், கடற்கரைக்கு சென்று பின்னர் அதே வழியாக வந்து மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் முடிவடைந்தது. நிகழ்ச்சியில் மத்திய அதிவிரைவு படை துணை கமாண்டர் இளங்கோவன், மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயராஜலட்சுமி, பாம்பன் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுதர்சனம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதுபற்றி துணை கமாண்டர் இளங்கோவன் கூறும்போது, கடந்த 4–ந்தேதி முதல் மாவட்டத்தில் முக்கிய இடங்களில் கொடி அணிவகுப்பு நடத்தி வருகிறோம். கமுதி, அபிராமத்தில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது மண்டபத்திலும், ஆர்.எஸ்.மங்கலத்தில் இன்று (சனிக்கிழமை) கொடி அணிவகுப்பு நடைபெற உள்ளது.

இதேபோல முக்கிய இடங்களுக்கும் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக ராமேசுவரம் கோவில், ரெயில் நிலையம், தனுஷ்கோடி ஆகிய இடங்களை பார்வையிட்டோம் என்று தெரிவித்தார். மண்டபத்தில் மத்திய அதிவிரைவு படையினரின் இந்த கொடி அணிவகுப்பை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்துச்சென்றனர். இந்த படையினர் வருகிற 12–ந்தேதி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற கொடி அணிவகுப்பு நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்