கொசவப்பட்டியில் ஜல்லிக்கட்டு, காளைகள் முட்டியதில் 52 பேர் காயம்

கொசவப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 52 பேர் காயம் அடைந்தனர்.;

Update: 2019-02-08 23:15 GMT
கோபால்பட்டி, 

திண்டுக்கல்லை அடுத்த கொசவப்பட்டி புனித உத்திரியமாதா கோவில் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நேற்று நடந்தது. விலங்குகள் நல அமைப்பு உறுப்பினர் மிட்டல் முன்னிலை வகித்தார். திண்டுக்கல் ஆர்.டி.ஓ. ஜீவா கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.

பின்னர் ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. முன்னதாக காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மதுரை, திருச்சி, திண்டுக்கல், நத்தம் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த 637 காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன.

களத்தில் துள்ளிக்குதித்த காளைகளை அடக்க இளைஞர்கள் போட்டி போட்டனர். இளைஞர்கள் பிடியில் சிக்காமல் காளைகள் வில்லில் இருந்து புறப்பட்ட அம்புபோல சீறிப்பாய்ந்தன. இருப்பினும் சளைக்காமல் வீரர்கள் போட்டி போட்டு காளைகளை அடக்கினர். வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக பரிசுகளும் அறிவிக்கப்பட்டன.

விறுவிறுப்பாக நடந்த ஜல்லிக்கட்டில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் தங்ககாசு, வெள்ளிகாசு, கட்டில், பீரோ, சைக்கிள் மற்றும் எவர்சில்வர் பாத்திரங்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 52 பேர் காயம் அடைந்தனர்.

கொசவப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் மலர்விழி தலைமையிலான மருத்துவக்குழுவினர் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் நத்தமாடிப்பட்டியை சேர்ந்த செந்தில் (வயது 50), மருனூத்துவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (26), வத்திராயிருப்பை சேர்ந்த பாரத் (27), கொசவப் பட்டியை சேர்ந்த ஜேம்ஸ் (35) ஆகிய 4 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டில் அசம்பாவித சம்பவம் நடக்காத வண்ணம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜஸ்டின் பிரபாகர் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கொசவப்பட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்