பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

ஊரக வேலை திட்டத்தில் முறையாக பணி வழங்கக்கோரி பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-02-08 22:45 GMT
பழனி, 


பழனி ஒன்றியத்துக்கு உட்பட்டது அ.கலையம்புத்தூர் ஊராட்சி. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இவர்களுக்கு முறையாக வேலை வழங்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து தொழிலாளர்கள் திட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து முறையிட்டனர். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் நேற்று பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் ஊரக வேலை திட்டத்தில் முறையாக பணி வழங்க வேண்டும் என்று கூறி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், ‘அ.கலையம்புத்தூர் ஊராட்சியில் வண்டிவாய்க்கால், மேற்குத்தெரு, அழகாபுரி, கணேசபுரம் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்குள்ளவர்களில் பலர் ஊரக வேலை திட்டத்தில் தொழிலாளர்களாக உள்ளனர். கடந்த சில நாட்களாகவே எங்களுக்கு முறையாக பணி வழங்கவில்லை. இதனால் நாங்கள் பொருளாதார ரீதியாக தவித்து வருகிறோம்’ என்றனர்.

இதற்கிடையே ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஒரு வாரத்தில் அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்