திருப்பூரில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் 3 லட்சம் பேர் பங்கேற்க ஏற்பாடு வானதி சீனிவாசன் பேட்டி

திருப்பூரில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் 3 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறினார்.

Update: 2019-02-08 23:00 GMT

திருப்பூர்,

பிரதமர் நரேந்திர மோடி நாளை(ஞாயிற்றுக்கிழமை) திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரில் நடைபெற உள்ள அரசு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக விழா மேடை மற்றும் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அந்த பணிகளை பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் நேற்று பார்வையிட்டார். முன்னாள் எம்.பி. கார்வேந்தன், கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், கோட்ட செயலாளர் செல்வக்குமார், திருப்பூர் மாவட்ட செயலாளர் ஸ்ரீவேல் தீபக் ஆகியோர் உடன் இருந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி நாளை(ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணிக்கு மேல் திருப்பூர் வருகிறார். அரசு சார்பில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பின்னர் பா.ஜனதா கட்சியின் மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 8 நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்த கூட்டத்தில் 3 லட்சம் பேர் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி நாடாளுமன்ற தொகுதிகளில் பா.ஜனதா வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் கூட பா.ஜனதா வேட்பாளர்கள் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இருக்கிறார்கள். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்த பகுதிகளில் இருந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பா.ஜனதா எம்.பி.க்கள் தேர்வாகி, அமைய இருக்கும் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசில் அங்கம் வகிப்பார்கள்.

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் பிரதமர் மோடியின் வருகை புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. மத்திய அரசின் ‘முத்ரா’ வங்கி கடன் திட்டம், ‘அம்ரூத்’ திட்டம், ‘டூரிப்’ திட்டத்தில் அதிகம் பயன்பெற்றது தமிழகம் தான். தமிழக மீனவர்கள் பிரச்சினை, ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கும் மத்திய அரசு தீர்வு கண்டுள்ளது. ராணுவ தளவாட கருவிகள் தயாரிக்க அனுமதி கொடுத்துள்ளதால் சிறு, குறு தொழில்துறையினர் பயன்பெற்றுள்ளனர். கோவை, திருப்பூர், ஈரோடு மாநகரங்கள் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. சாலை வசதிகள் மேம்பாடு அடைந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி அமைத்து பா.ஜனதா போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி குறித்து கட்சி தலைமை அறிவிக்கும். எதிர்க்கட்சிகள் தங்கள் நிலைபாட்டை தெரிவிக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் தமிழகத்தின் மாண்பை குறைக்கும் வகையில் அவர்கள் செயல்படுகிறார்கள். கருப்புக்கொடி போராட்டம் நடத்துவதால் அவர்களின் முகத்திரை கிழிவதை மக்கள் கவனித்து வருகிறார்கள்.

மோடிக்கு எதிர்ப்பு என்ற பெயரில் தான் அவர்கள் போராட்டங்களை நடத்துகிறார்கள். ஆனால் பா.ஜனதா ஆட்சியில் மத கலவரம், குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதா? என்பதை மக்கள் கவனித்து வருகிறார்கள். நதிகள் இணைப்பு திட்டத்தை பா.ஜனதா அரசு அறிவித்தது. காவிரி–கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற உள்ளது. தொழில் நகரான இந்த பகுதியில் குழாய் மூலம் கியாஸ் கொண்டு வந்து குறைந்த விலையில் தொழில்துறையினருக்கும், மக்களுக்கும் கிடைப்பதற்கான பணிகளை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்