புயல் நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
கூத்தாநல்லூர் அருகே புயல் நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூத்தாநல்லூர்,
கூத்தாநல்லூர் அருகே உள்ள ராமநாதன்கோவில் கிராமத்திற்கு புயல் நிவாரண பொருட்கள் பெட்டகம் வழங்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நேற்று தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று முறையிட்டனர். அப்போது அதிகாரிகளிடம் நிவாரண பொருட்களை வழங்க வேண்டும் என்று கூறினர். இந்த நிலையில் நேற்று ராமநாதன் கோவில் கிராம மக்கள் லெட்சுமாங்குடி பாலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது புயல் நிவாரண பொருட்கள் பெட்டகத்தை உடனடியாக வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினர். இதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.