தேர்தல் பிரசாரத்துக்காக, 14–ந் தேதி பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ஈரோடு வருகை வானதி சீனிவாசன் தகவல்

தேர்தல் பிரசாரத்துக்காக வருகிற 14–ந் தேதி பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ஈரோடு வருவதாக அந்த கட்சியின் தமிழக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.

Update: 2019-02-08 23:45 GMT

பவானி,

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளது. இதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் நாடு முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக தமிழ்நாட்டிலும் பா.ஜ.க. தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

கொங்கு மண்டலமான ஈரோடு, நாமக்கல், திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பிரசார கூட்டம் ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோட்டில் வருகிற 14–ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகிறார்.

இந்த நிலையில் சித்தோட்டில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

தேர்தல் பிரசாரத்துக்காக வருகிற 14–ந் தேதி சித்தோட்டுக்கு அமித்ஷா வருகிறார். அங்கு அன்று மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். முன்னதாக நெசவாளர்களுக்கான ஆலோசனை கூட்டமும், சக்தி கேந்திர சம்மேளனத்திலும் கலந்து கொள்கிறார். அமித்ஷாவின் வருகை பா.ஜ.க.வினருக்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் ஊட்டி உள்ளது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுக்கூட்டங்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் மதம் சார்ந்த சடங்குகள் குறித்து சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசிவருகிறார். இதன்காரணமாக தி.மு.க. கட்சி இளைஞர்களிடையே அவர் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார்.

கொங்கு மண்டலத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு இணையான பலத்துடன் பாரதீய ஜனதா வாக்கு வங்கியை வைத்து உள்ளது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கட்சியின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.சேகர் நரேந்திரன், வக்கீல் அணி செயலாளர் பழனிச்சாமி, ஈரோடு நாடாளுமன்ற பொறுப்பாளர் சிவசுப்பிரமணியம், மாவட்ட பொதுச்செயலாளர்கள் கலைச்செல்வன், குணசேகரன், மகேஸ்வரன் உள்பட கட்சியினர் பலர் இருந்தனர்.

மேலும் செய்திகள்