சேலம் கோவில் விழாவை சுமூகமாக நடத்த போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் முற்றுகை இன்ஸ்பெக்டரை கண்டித்து கோ‌ஷமிட்டதால் பரபரப்பு

சேலம் கோவில் விழாவை சுமூகமாக நடத்த ஆவண செய்யக்கோரி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டனர். இன்ஸ்பெக்டரை கண்டித்து கோ‌ஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-08 21:30 GMT

சேலம்,

சேலம் தாதகாப்பட்டி பகுதியில் மாரியம்மன், காளியம்மன் கோவில்கள் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தைமாதத்திருவிழா விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. நேற்று பொங்கல் வைத்தல் நடைபெற்றது. இரவு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மேளம் அடிக்கக்கூடாது. ஊர்வலமாக வரக்கூடாது என்று இன்ஸ்பெக்டர் குமார் கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் விழாவை சுமூகமாக நடத்த ஆவண செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் பொது மக்கள் ஏராளமானவர்கள் நேற்று மதியம் சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போலீஸ் கமி‌ஷனரை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்று கூறினர். அதற்கு அனைவரும் செல்ல வேண்டாம். சிலர் மட்டும் செல்ல வேண்டும் என்று போலீசார் கூறினர்.

அப்போது போலீசாருக்கும், பொது மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சிலரை மட்டும் அனுமதித்தனர். அவர்கள் போலீஸ் துணை கமி‌ஷனர் சியாமளாதேவியை சந்தித்து மனுவை கொடுத்தனர். அப்போது அவர் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் கோவில் விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்திக்கொள்ள போதிய கால அவகாசம் வழங்கப்படும் என்று கூறினார். இதையொட்டி அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். முன்னதாக அவர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரை கண்டித்து பல்வேறு கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இது குறித்து பொது மக்கள் கூறியதாவது:–

250 ஆண்டு பாரம்பரியமிக்க இந்த கோவில் விழா 15 நாட்களாக நடந்து வருகிறது. நேற்று கலை நிகழ்ச்சி நடந்தது. இதற்காக மேளம் அடிக்கப்பட்டது. அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மேளம் அடிக்க கூடாது என்று கூறி மேளத்தை பிடுங்கி சேதப்படுத்தினார். மேலும் மேளம் அடித்தவர்கள் மற்றும் பொது மக்கள் சிலரை தாக்கினார். தட்டி கேட்ட கோவில் நிர்வாகிகளை கைது செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

கோவில் விழாவுக்கு பாதுகாப்பு என்ற பெயரில் வந்த போலீசார் பொது மக்களை மிரட்டி துன்புறுத்துகின்றனர். எனவே கோவில் விழாவை சுமூகமாக நடத்தவும், கலை நிகழ்ச்சிகள் நடத்த உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்பதற்காக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம். எங்கள் கோரிக்கையை போலீஸ் துணை கமி‌ஷனர் ஏற்றுக்கொண்டு உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

முற்றுகை போராட்டத்தால் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்