தம்மம்பட்டி அருகே இரவில் பரபரப்பு: வாலிபருக்கு கத்திக்குத்து; பொதுமக்கள் சாலை மறியல்

தம்மம்பட்டி அருகே வாலிபரை கத்தியால் குத்தியவரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-08 22:00 GMT

தம்மம்பட்டி,

தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மகன் செல்வம்(வயது 30). இவர் நேற்று இரவு அதே பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் செல்வத்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.

பின்னர் அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வத்தை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதையடுத்து படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையில் செல்வத்தை கத்தியால் குத்தியவரை கைது செய்யக்கோரி செந்தாரப்பட்டியில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்தும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்கார்த்திக் குமார் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்களிடம், இதுதொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவரை கைது செய்வதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இந்த சம்பவத்தையொட்டி அங்கு பதற்றம் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்